ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேசாய் முந்தா. இவரது மகன் கனு முந்தா. இவரை உறவினர் சாகர் முந்தாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து வீடு புகுந்து கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது தந்தை தேசாய் முந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிசார் வழக்குப் பதிவு செய்து சாகர் முந்தாவை கண்டுபிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
தேசாய் முந்தாவின் குடும்பத்திற்கும், சாகர் முந்தாவின் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில்தான் தேசாய் முந்தா வீட்டில் இல்லாதபோது தனது நண்பர்களுடன் சேர்ந்து கனு முந்தாவை கடத்தி சென்றுள்ளனர். பிறகு குமாங் கோப்லா காட்டுப்பகுதியில் அவரது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேலும் அந்த தலையை எடுத்து நண்பர்கள் தங்களது செல்போனில் ஒருவர் மாறி ஒருவர் செல்ஃபி எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலிஸார் காட்டுப்பகுதிக்குச் சென்று தலையில்லாத அவரது உடலை மீட்டுள்ளனர்.
பிறகு அங்கிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள துல்வா துங்க்ரி பகுதியில் தலையை கண்டுபிடித்தனர். மேலும் 5 செல்போன்கள், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒரு காரை போலிஸார் பறிமுதல் செய்து சாகர் முந்தா மற்றும் அவரது நண்பர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க குந்தி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி அமித்குமார் தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து முர்ஹு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சுடாமணி துடு கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குமாங் கோப்லா காட்டில் உடல் மற்றும் தலை 15 கிமீ தொலைவில் துல்வா துங்ரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட தலையுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
இறந்தவரின் செல்போன்கள் உள்பட 5 கைத்தொலைபேசிகள், இரத்தக்கறை படிந்த இரண்டு கூரிய ஆயுதங்கள், ஒரு கோடாரி மற்றும் எஸ்யூவி வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு நிலம் தொடர்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பகையே தலை துண்டிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது” என்றார்.