
மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது சென்னை-புதுச்சேரி இடைப்பட்ட மாமல்லபுரம் அருகே வரும் 9-ம் தேதி அல்லது 10-ம் அதிகாலைக்குள் கரையை கடக்கும். இது நிகழ்வு கரையை நெருங்கும் போது வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் எனவும், வங்கக்கடலில் நீடிக்கும் மாண்டோஸ் எனும் புயலால் தமிழ்நாட்டில் இன்று முதல் படிப்படியாக மழை தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வங்கக் கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார்.