திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த புங்ரா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்ற இளைஞரின் திருமணத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது, உறவினர்களுக்காக வீட்டில் சமையல் செய்யப்பட்டது.
அந்நேரம் திடீரென வீட்டின் ஸ்டோர் அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில் வீடு இடிந்து விழுந்து தீ பற்றிக் கொண்டது.
இந்த விபத்தில் ரத்தன் சிங், குஷ்பு என்ற இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 49 பேருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக்குழுவிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
newstm.in