பொள்ளாச்சி: வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பொள்ளாச்சியில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதனால் சந்தை களை கட்டியது.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி சந்தையில் மாடுகளை வாங்க, கேரள வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. மேலும், மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில் ஒரு காளைமாடு ரூ.36 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.35 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.45 ஆயிரம் வரையிலும், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்கும் விலை போனது என, மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.