ஜி20 நாடுகளின் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நன்மைகள் அயல் நாடுகளுக்கு பலம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில், இன்று (21.12.2022) சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்காவில் மரக்கன்று ஒன்றை நட்டினார்.

ஜி20 நாடுகளின் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நன்மைகள் அயல் நாடுகளுக்கு பலம்
– பிரதமர் தினேஷ் குணவர்தன

“இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவி வழங்கப்படும்.”

-இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

“இந்திய-இலங்கை நட்புறவு சில ஆண்டுகளுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. அது பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது. எல்லாக் காலங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வந்திருக்கின்றன. இன்று இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியப் பிரதமராகவும் ஜி20 நாடுகளின் தற்போதைய தலைவராகவும் இருக்கும் நரேந்திர மோடி அவர்களின் கீழ், அயல் நாடுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன.

உலகின் பலம் வாய்ந்த நாடொன்றின் உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் பங்கேற்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. எனவே, இன்று சீதாவக மக்களுக்கும் விசேடமான நாள். சுற்றாடல் என்பது ஒரு தலைமுறைக்கு மட்டுமானதல்ல. உயிர் பல்வகைத்தன்மை நிறைந்த இத்தகைய தாவரவியல் பூங்காக்களை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சீதாவக இராசதானி முக்கிய பங்கு வகித்தது. அதற்கு இந்த தனித்துவமான சூழலின் இயற்கையும் காரணமாகும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர்…
“இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இயற்கை வளங்களை சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவின் மகத்தான உறவுகளையும் வரலாற்றையும் நினைவுகூர்வதற்கும், அந்த சிறந்த உறவுகளை வலுப்படுத்திய பிரதமரின் தந்தை அமைச்சர் பிலிப் குணவர்தன போன்றவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எமது பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் சூழல் நட்பு கொள்கைகளை உருவாக்க இரு நாடுகளினதும் கூட்டு முயற்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, சீதாவக தாவரவியல் பூங்கா பணிப்பாளர் கலாநிதி ஷிரோமி கிருஷ்ணராஜா உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.