டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை – ராகுலுடன் சோனியா, பிரியங்கோ கைகோர்ப்பு – ஆம்புலன்சுக்கு வழிவிட்ட யாத்திரை.. புகைப்படங்கள்.

டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் புகுந்தது. டெல்லியில் ராகுல் யாத்திரையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா வத்ரா உள்பட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர்.  ராகுலின் யாத்திரை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ், எந்தவித சிரமமுன்றி செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

2024 பாராளுமன்ற தேர்தல், பாஜகவின் மக்கள் விரோத வெறுப்பு அரசியல் போன்றவற்றை கருத்தில்கொண்டு,  குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி. அவரது தலைமையில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அணிவகுப்பு செல்கின்றனர்.

இந்த யாத்திரையானது,  செப்டம்பர் 7ந்தேதி  தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்க கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியான  மாநிலங்களைத் தொடர்ந்து இன்று காலை அரியாணாவின் பரிதாபாத் நகரில் இருந்து தலைநகர்டெல்லி நோக்கி வந்த ராகுல் தலைமையிலான பாத யாத்திரை குழுவினர், காலை 8.30 மணியளவில் டெல்லி எல்லைக்குள்  நுழைந்தது. இன்றைய நடைப்பயணம் டெல்லி செங்கோட்டை பகுதியில் முடிவடைம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என ஒருவாரம் யாத்திரைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் மீணடும், டெல்லியில் தொடங்கி ஹிமாசல் வழியாக ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது.

இன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும்,  கலந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். மேலும், பல கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள்,  உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் கலந்துகொண்டுள்ளார்.

ராகுலின் நடைபயணத்தால் இன்று டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரியானா மாநிலத்தின் பதர்பூர் எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழைந்தபோது,  அங்கிருந்த தனியார் மருத்துவமனையை  நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸைப் பார்த்த ராகுல் காந்தி, ஆம்புலன்சுக்கு வழிவிடும் வகையில், தனது நடைப்பயணத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார்.

ஆம்புலன்ஸ் எந்தத் தடையும் இல்லாமல் மருத்துவமனைக்குள் நுழைந்த பிறகே, நடைப்பயணம் தொடங்கியது. டெல்லியில், ராகுல் காந்தியுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஏராளமான மக்களும் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டனர்.

ராகுலின் டெல்லி நடைபயணத்தின்போது, பிரதான் மந்திரி கைசா ஹோ, ராகுல் காந்தி ஜெய்சா ஹோ என்ற  முழக்கம்  பலமாக ஒலித்தது.

ராகுல் நடைப்பயணம் டெல்லிக்குள் நுழைந்ததால், அங்கு போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. நடைப்பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் சாலைகள் குறித்து  டெல்லி போக்குவரத்துக் காவல்துறை நேற்றே மக்களுக்கு தகவல் அளித்து மக்கள் மாற்றுப் பாதைகளை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.








Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.