கும்பகோணம்: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35- ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் என்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுகவினர் எம்ஜிஆர் உருவம் அச்சிட்ட பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணம் ஒன்றியம் தில்லையம்பூர் கிளை அதிமுக சார்பில் அவரது, நினைவு நாளை ஒட்டி பதாகையை நேற்று இரவு வைத்துள்ளனர். இன்று காலை அதிமுகவினர் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது பதாகை கிழிந்திருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அறிந்த அதிமுக ஒன்றிய செயலாளர் க.அறிவழகன் மற்றும் அதிமுகவினர் அங்கு திரண்டு அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டீஸ்வரம் போலீஸார் அந்த இடத்திற்கு சென்று ,அவர்களிடம் பதாகை கிழித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து தில்லையம்பூர் கிளை செயலாளர் கணேசன் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.