மனைவி, குழந்தையை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்: நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை:  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் இடையன்குளம் ரேஷன் கடை தெருவைச் சேர்ந்தவர் கலியன். இவரது மகன் வெங்கடேசன் (42). இவருக்கும் களக்காட்டை சேர்ந்த மாரியம்மாள் மகள் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவ்யா என்ற 6 மாத குழந்தையும் இருந்தது. இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி இசக்கியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி குழந்தை திவ்யா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை திடீரென அழுதது. இதைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், குழந்தையை கன்னத்தில் கடித்து தாக்கினார்.

இதனை தடுக்க வந்த இசக்கியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அழுது கொண்டிருந்த குழந்தை திவ்யாவை வீட்டின் பின்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெங்கேடசன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து இசக்கியம்மாளின் தாய் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் சின்னகோவிலான் குளம் போலீசார் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.