சென்னை: ஆவின் நிறுவனத்தில் 2020 முதல் 2021-ம் ஆண்டு வரை விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்ததாக மேலாளர்கள், துணை மேலாளர்கள் உட்பட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
மேலாளர்கள் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் துணை மேலாளர்கள் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர்கள் (குளிர்பதனம் மற்றும் கொதிகலன்), நிர்வாக, இளநிலைப் பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் 2021 ஜூலையில், அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான குழுவினர், பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், விதிகளை மீறி ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், மேலாளர் மற்றும் துணைமேலாளர் பணியிடங்கள் சட்டத் தகுதியின்றி, மாவட்ட தொழிற்சங்கங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் விசாரணைக்குப் பிறகு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்ததாக, மேலாளர்கள், துணைமேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் ஆவர்.
விருதுநகர், தேனி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகக் குழுக்களைக் கலைத்தும், கல்விச் சான்றிதழ் சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் சங்க செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், விருதுநகர், திருச்சி, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 6 அதிகாரிகளிடமிருந்து ரூ.2.47 லட்சம் தண்டவசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் அண்மையில் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஆவின் நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “2020 முதல் 2021-ம் ஆண்டு வரை பணியிடங்கள் நியமனத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் அவர்கள் சட்டப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். பணிநியமன முறைகேடு தொடர்பாக 236 பேரை பணிநீக்கம் செய்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.