நியூயார்க்: கரோனாவின் உண்மையான பாதிப்பை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவில் கரோனா பாதிப்பு தற்போது எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து உலக நாடுகள் பலவும் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனாவின் உண்மையான பாதிப்பு குறித்த தரவுகளை தருமாறு சீனாவை கடந்த வாரம் வலியுறுத்தியது. இதையடுத்து, சீனா சில தகவல்களை பகிர்ந்துகொண்டது. அதில், டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 22 கரோனா இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவு இயக்குநர் மைக்கேல் ரியான் கூறும்போது, “சீனா வெளியிட்டுள்ள கரோனா தொற்று எண்ணிக்கைகள், மருத்துவமனை சேர்க்கைகள், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை உண்மையான பாதிப்பை வெளிப்படுத்துவதாக நாங்கள் நம்புகிறோம். எனினும் சீனாவில் கரோனா பாதிப்பு குறித்த முழுமையான தரவுகள் எங்களிடம் இல்லை. சீனா உண்மையான எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால், சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான், சில வாரங்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.