கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அஞ்சுஸ்ரீ பார்வதி (19) என்ற இளம் பெண்ணின் குடும்பத்தினர் புத்தாண்டு இரவு ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்து சாப்பிட்டனர்.
சாப்பாடு, குழிமந்தி (Kuzhimanthi) என்ற கேரளா வகை சிக்கன் பிரியாணி உணவு, சாலட் ஆகிய உணவுகளை வாங்கி அஞ்சுஸ்ரீயும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர்.
ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குடும்பத்தினர் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதில், அஞ்சுஸ்ரீக்கு மட்டும் பாதிப்பு தீவிரமடைந்தது.
இதனையடுத்து அவர் காசர்கோடு மருத்துமனையில் ஜனவரி 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், அங்கிருந்து மங்களூருவில் உள்ள தனியார் மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சுஸ்ரீ இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் காசர்கோடு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உரிய தரத்தை பின்பற்றாத ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
newstm.in