பொதுமக்கள் முன்பாக மேடையில் மனைவிக்கு ‘ப்ளையிங் கிஸ்’ கொடுத்த காங். எம்எல்ஏ

புவனேஸ்வர்: காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாகினிபதி, தனது மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் ஜேப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ  தாரா பிரசாத் பாகினிபதி, தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரது மனைவி மினாகி பாகினிபதியுடன் கலந்து கொண்டார். அப்போது தம்பதியை உள்ளூர் மாலை அணிவித்து கவுரவித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். திடீரென உணர்ச்சிவசப்பட்ட எம்எல்ஏ, தனது மனைவியின் கையை பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.

ஆனால் அவரது மனைவி முத்தத்தை தவிர்த்தார். எப்படியும் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்தாக வேண்டும் என்று விரும்பிய எம்எல்ஏ, ‘ப்ளையிங் கிஸ்’ (பறக்கும் முத்தம்) கொடுத்து தன்னை திருப்திப்படுத்திக் கொண்டார். பலமுறை  ‘ப்ளையிங் கிஸ்’ கொடுத்த எம்எல்ஏவை, அவரது மனைவி கோபமாக பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஒடிசா சட்டமன்ற சபாநாயகர் எஸ்.என்.பட்ரோவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பறக்கும் முத்தம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.