பெங்களூரு: தூண் சாய்ந்து விபத்து; இரண்டரை வயது மகன், தாய் பலி- ‘ஊழலின் விளைவு’ என காங்கிரஸ் காட்டம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர் முழுவதும், மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாவது பேஸ் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்துகளும் நிகழ்ந்துவருகின்றன. இந்த நிலையில், இன்று காலை கல்யாண் நகர் – ஹெச்.பி.ஆர் லே-அவுட் பகுதியில், மெட்ரோ பாலத்துக்காகக் கட்டப்பட்டிருந்த, 40 அடி உயரமுள்ள இரும்புத்தூண் திடீரென ரோட்டில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

இரும்புத்தூணுக்கு அடியில் சிக்கிய இரு குழந்தைகள் உட்பட நான்கு பேரை, அங்குள்ள மக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில், இரண்டரை வயது ஆண் குழந்தையும், பெண் ஒருவரும் இறந்துவிட்டனர்.

விபத்துக்குள்ளான பகுதி

இது குறித்து பெங்களூரு போலீஸாரிடம் பேசினோம். ‘‘பெங்களூரில் வசிக்கும் சிவில் இன்ஜினீயர் லோகித் (32), சாஃப்ட்வேர் இன்ஜினீயரான தன்னுடைய மனைவி தேஜஸ்வினி (28), இரண்டரை வயதுடைய இரட்டை குழந்தைகளான விஹான் மற்றும் விஸ்மிதா ஆகியோருடன் ஸ்கூட்டரில், ஹெப்பல் பகுதிக்குப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது, கான்கிரீட் இடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புத்தூண் ரோட்டில் சாய்ந்ததில், நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதில், தேஜஸ்வினி, விஹான் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். லோகித்துக்கும், அவர் மகளுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

விபத்துக்குள்ளான பகுதி

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம், ‘‘கட்டுமானப் பணிகள் நடந்துவரும் தூண் எப்படி உடைந்து விபத்துக்குள்ளானது என முழுமையான விசாரணை நடத்தப்படும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

‘ஊழலின் விளைவு’!

இந்தச் சம்பவம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், ‘‘கர்நாடகத்தில் பா.ஜ.க அரசின் 40 சதவிகித ஊழல் ஆட்சியின் விளைவுதான் இந்த விபத்து. எந்த வளர்ச்சிப் பணியிலும் தரம் இல்லை’’ என பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்திருக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.