சஞ்சீவ் சன்யால் எழுதிய “Revolutionaries The other story of how India won its freedom” என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கடந்த காலத்தின் காலனித்துவ எச்சங்களை அகற்றும் பிரதமர் மோடியின் நோக்கத்துக்கு இணங்க, அதிலிருந்து வரலாற்றை விடுவிப்பதே மிக முக்கியமானது.

புதிய தலைமுறையின் முன்பு உண்மையான வரலாற்று உண்மைகளை வைக்கவேண்டியது அரசு மற்றும் வரலாற்றாசிரியர்களின் பொறுப்பு. நாம் முதலில் நமது வரலாற்றை அந்த ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். வீர் சாவர்க்கர் அந்த வேலையை முதலில் செய்தார். அதன் அடிப்படையில், அகிம்சைப் போராட்டத்துக்கு முன்னால், 1857-ல் நடந்த புரட்சியே முதல் சுதந்திரப் போர் எனக் கூற வீர சாவர்க்கர் முயன்றார்.
அகிம்சைப் போராட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பைக் கொண்டிருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மற்றவர்களின் எந்தப் பங்கும் சுதந்திரப் போராட்டத்தில் இல்லை என்பது சரியானது அல்ல.
அகிம்சைப் போராட்டத்துக்கு இணையாக ஆயுதப் புரட்சியின் போராட்டம் தொடங்கவில்லை என்றால், சுதந்திரம் பெற இன்னும் பல ஆண்டுகள் எடுத்திருக்கும். நமக்கு மானியமாக சுதந்திரம் கிடைக்கவில்லை, லட்சக்கணக்கான மக்கள் தியாகம் செய்து, இரத்தம் சிந்திய பின்னர் கிடைத்தது தான் சுதந்திரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று கர்த்யவபத்தில் நிறுவப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையைப் பார்க்கும்போது, அது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

இந்தப் புத்தகத்தில் “other story” என்ற வார்த்தையே இந்நூலின் சுருக்கம். வரலாறு எழுதப்பட்டதின் மூலமும், கல்வியின் மூலமும் ஒரு கண்ணோட்டம் பொது மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. வன்முறை போராட்டத்திற்கு, சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறமுடியாது. இது சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால் அகிம்சை இயக்கம், ஆயுதப் புரட்சி ஆகிய இரண்டுக்கும் 1857 புரட்சி அடித்தளமாக இருந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால் வரலாறு அவர்களின் மூலம் எழுதப்பட்டது. அதனால்தான் குழப்பம் இன்னும் தொடர்கிறது. எனவே இனி இந்தியக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றிய 300 பேரைத் தேட மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.

ஏனெனில் பல்வேறு காரணங்களால் இன்றுவரை வரலாறு திரிக்கப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இப்போது அதை சரியான முறையில் எழுதுவதை யாராரும் தடுக்க முடியாது. வரலாறு வெறும் மிதவாதிகள், போராளிகளின் வேறுபாடுகளை கூறுவதாக இல்லாமல் உண்மையைச் சொல்வதாக இருக்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.