இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தனித் தீர்மானம் கொண்டுவந்தார். இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அண்ணா, தம்பிக்கு எழுதிய மடலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

2004-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் தி.மு.க உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்தபோது, ரூ.2,427 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் பாதி முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க சார்பில் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டு மக்களின் நீண்டக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்புடைய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய பா.ஜ.க அரசு சொல்லிருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.செல்வப்பெருந்தகை, “இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முயன்றபோது, `அமெரிக்காவின் ராணுவ தளவாடம் இலங்கை திரிகோண மலையில் அமைக்கப்படவிருக்கிறது. அதற்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துகிறார்’ எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது” எனத் தெரிவித்துக்கொண்டிருந்த போதே…

குறுக்கிட்டுப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கடந்த காலங்களில் பல்வேறு நிலைகளில், பல்வேறு அரசியல் சூழலில் பேசிய செய்திகளை எல்லாம் எடுத்துப் பேசுவதற்கு இது சரியான நேரமல்ல. எல்லோரும் அப்படி பேச ஆரம்பித்தால் அதற்கான வாய்ப்பை அவைத் தலைவர் ஏற்படுத்தித் தந்ததுபோலாகிவிடும்” என்றார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அவைக் குறிப்பில் இருப்பதைதான் செல்வப்பெருந்தகை பேசினார். ஆனாலும், சர்ச்சையைத் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அதை உணர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை எதிர்த்ததாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா எதிர்த்ததற்கான காரணம், அந்தப் பகுதியில் மண் அரிப்பு அதிகம் ஏற்படும். எனவே அதையும் சரியாக ஆராய்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் எதிர்த்தார்” என விளக்கமளிக்க, உடனே எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பிறகு ஏன் ஜெயலலிதா நீதிமன்றம் சென்று இந்தத் திட்டத்தை தடுத்தார் என்பதையும் விளக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு நடுவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேசுவதற்கு சபாநாயகர் அனுமதியளித்ததும், “அவைக் குறிப்பில் இருப்பது எதையும் நான் பேசவில்லை. நடந்ததைத்தான் பதிவுசெய்கிறேன். சூயிஸ் கால்வாயில்கூட மணல் சரிந்து கப்பல் தரை தட்டியது. பொதுவாக இயற்கை சார்ந்து அமைக்கும் திட்டங்களில் இது போல நடைபெறும். எனவே, அதை சிறப்பாக கையாள்வதுதான் அரசின் திட்டம்” என்றார்.
தொடர் பரபர விவாதங்களால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.