செங்கல்பட்டு மாவட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை செய்து உடலை பாலாற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அருகே வேப்பஞ்சேரி பாலாற்றில் பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து கூவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மர்ம நபர்கள் பெண்ணின் கை, கால்களை கட்டிக் கொலை செய்து அவரை பாலாற்றில் வீசி சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.