அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் சாவு

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவறிக்கு எதிரான ‘பிளாஸ் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற தன்னார்வ அமைப்பு இந்த போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு நேர்ந்தது போலவே அமெரிக்காவில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் கீனன் ஆண்டர்சன். கருப்பினத்தை சேர்ந்த இவர் ‘பிளாஸ் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பின் இணை நிறுவனரான பாட்ரிஸ் கல்லர்சின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

சாலை விபத்து தொடர்பான புகாரில் இவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் அதிகாரி அவரை தரையில் தள்ளி கழுத்தில் கை முட்டியை வைத்து அழுத்தினார். அப்போது ஆண்டர்சன், “உதவி, உதவி, என்னை ஜார்ஜ் பிளாய்ட் போல கொலை செய்ய பார்க்கிறார்கள்” என அலறினார். அப்போது அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி ஆண்டர்சன் மீது மின்சாரத்தை பாய்ச்சும் துப்பாக்கியை 30 வினாடிகள் தொடர்ந்து பயன்படுத்தினார். இதில் சுயநினைவை இழந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்வம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.