டெல்லியில், கொரோனா களப் பணியின்போது உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
டெல்லியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மணிஷ் சிசோடியா, “டெல்லியில், கொரோனா பெருந்தொற்றின்போது தங்களது உயிரை பற்றி கவனம் கொள்ளாமல் மனிதஇனம் மற்றும் சமூகம் பாதுகாக்கப்பட கொரோனா கால களப்பணியாளர்கள் சுயநலமின்றி பணியாற்றி, உயிர் தியாகம் செய்துள்ளனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவொரு தொகையும் இழப்பீடு செய்யாது. ஆனால், இந்த தொகையை பெறுவதன் வழியே அவர்கள் ஒரு கண்ணிய மிக்க வாழ்வை வாழ்வதற்கான அர்த்தம் நிச்சயம் ஏற்படும். கொரோனா களப்பணியாளர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைக்கும் அரசு துணையாக நிற்கும்.
இதன்படி, கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, கொரோனா நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு களப் பணியாற்றி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாயை டெல்லி அரசு வழங்கும்” என, மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.