வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயசுதா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை ஜெயசுதா. 1972ம் ஆண்டு வெளிவந்த 'பண்டண்ட்டி காபுரம்' என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகமானவர். தமிழில் அதே வருடத்தில் வெளியான 'குல கௌரவம்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் “சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், தீர்க்க சுமங்கலி, நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, பட்டாக்கத்தி பைரவன், நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

நடிகை ஜெயசுதா பற்றி கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி பரவியது. மூன்றாவதாக அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதே அந்த வதந்தி. ஜெயசுதா 1982ல் காகர்லாபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அடுத்த சில வருடங்களில் விவாகரத்து செய்தார். அதன் பின் 1985ல் நிதின் கபூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். நிதின் 2017ம் ஆண்டில் மறைந்தார்.

இந்நிலையில் ஜெயசுதாவுடன் ஒருவர் எப்போதும் உடன் வருவது குறித்துதான் கடந்த சில நாட்களாக அவரது மூன்றாவது திருமணம் பற்றிய வதந்தி பரவியது. சமீபத்தில் நடந்த 'வாரசுடு' பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் அவர் வந்திருந்தார். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார் ஜெயசுதா. அவர் தன்னைப் பற்றிய பயோபிக் படம் எடுக்க உள்ளார் என்றும், அதற்காகத்தான் உடன் வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஜெயசுதா அரசியலிலும் பங்காற்றி வருகிறார். சென்னையில் பிறந்த ஜெயசுதாவுக்கு தற்போது 64 வயதாகிறது. 2009ம் ஆண்டு செகந்திரபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன்பின் தெலுங்கு தேசம் கட்சியில் சில வருடங்கள் பணியாற்றி தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.