இஸ்லாமாபாத்: உலகளவில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் கால்தடம் மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாக்., வெளியாகும் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது.
வழிநடத்தும் இந்தியா
பாகிஸ்தானில் வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில் அரசியல், பாதுகாப்புத்துறை நிபுணர் ஷஜாத் சவுத்ரி எழுதியுள்ளதாவது: வெளியுறவு கொள்கையில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தனக்கு என புதிய விதியை வகுத்துள்ளது. தனக்கு முன்னர் இருந்தவர்கள் செய்ய முடியாததை, இந்தியாவிற்கு முத்திரை குத்த பிரதமர் மோடி ஏதோ செய்துள்ளார். முக்கியமாக, இந்தியா எதை செய்ய நினைக்கிறதோ அதை தேவையான அளவிற்கு செய்கிறது. இந்தியா தனது செல்வாக்கு மற்றும் தாக்கத்தினை சர்வதேச அளவில் ஏற்படுத்தும் அளவிற்கு மோடி கொண்டு சென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் தடம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. ஜி7 மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படுவதுடன், ஜி20 அமைப்பில் உறுப்பினர் ஆக உள்ளது. தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், பெருந்தொற்று ஆகியவற்றில் சமமான வளர்ச்சிக்கு முக்கியமானவற்றை பிரதிநிதித்துவப்படுத்த உலகளவில், தெற்கு பகுதியை இந்தியா வழிநடத்தி செல்கிறது.
முதலீட்டாளர்கள் விரும்பும் நாடு
ஆசியாவிலும், உலகளவிலும் ஒரு முக்கியமான நாடாக மாறும் வகையில், இந்தியா மகத்தாக செயல்பட்டுள்ளது. ஜிடிபி அளவில் இந்தியாவின் வளர்ச்சியானது, கடந்த 3 தசாப்தமாக சிறப்பாக செயல்படும் சீனாவுடன் ஒத்து போனது. 2004 ல் இந்தியாவில் அந்நிய முதலீடானது 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஆனது. ஆனால், 1992ல் இது 9.2 டாலர் மட்டுமே இருந்தது. மன்மோகன் ஆட்சியில், இது, 252 பில்லியன் டாலர் ஆக இருந்தது. பிரதமர் மோடி தலைமையில், அந்நிய முதலீடு 600 பில்லியன் டாலர் ஆக உயர்ந்து, ஜிடிபி ஆனது 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இந்த மகத்தான வளர்ச்சியானது, அனைத்து முதலீட்டாளர்களும் விரும்பும் நாடாக இந்தியாவை மாற்றி உள்ளது.
கெஞ்சல்
பாகிஸ்தானினுக்கு மிகவும் நெருங்கிய நாடான சவுதி அரேபியா, இந்தியாவில் 72 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்கிறது. ஆனால், பாகிஸ்தானில் 7 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நாம் கெஞ்சுகிறோம்.
இந்திய கால்தடம்
உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா, 2037 க்குள் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருக்கும். உலகின் 3வது மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடாகவும் உள்ள இந்தியா பல்வேறு தளங்களில் தனது கால்தடத்தை பதித்துள்ளது.
இந்தியா முன்னணி
விவசாயத்துறை மற்றும் ஐடி துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. விவசாயத்துறையில் இந்தியாவில் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் மகசூல் ஆனது, உலகில் சிறந்ததாக உள்ளது. 140 கோடி மக்கள் வசித்தாலும், ஒப்பிட்டளவில் நிலையான மற்றும் செயல்பாட்டு அரசியல் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அரசியல்ரீதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஏமாந்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அது சர்ச்சைக்குரிய பகுதி என்பதை நீக்கியுள்ளது.
மோடியின் ராஜதந்திர புரட்சி

தனது அளவு மற்றும் பரப்பளவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் தடம் மற்றும் உலகிற்கு என்ன முக்கியம் என்பது அடிப்படையில், உலகளவில் இந்தியாவானது, இன்றைக்கு பொருந்தி போகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தியா தவிர வேறு எந்த நாடும் ரஷ்யாவுடன் எளிதாக வர்த்தகம் செய்ய முடியாது. இந்தியா மட்டும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதுடன், அதனை சுத்தம் செய்து ஏற்றுமதி செய்து மறைமுக வழியில் டாலர் ஆக சம்பாதிக்கும். இரண்டு எதிரெதிர் மிலிட்டரி சூப்பர் நாடுகள் இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. இது மோடியின் ராஜதந்திர புரட்சி அல்லாமல் வேறு என்ன என கூற முடியும்.
மறுபரிசீலனை
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி இப்போது மிகப்பெரியதாக மாறி உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளை மட்டும் சார்ந்து இருக்காமல் இந்தியா தனது உறவுகளை விரிவுபடுத்தி உள்ளது. துணிச்சலான முடிவுகளை எடுத்திருப்பதால், இந்திய மக்கள் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். இந்தியா குறித்த தனது கொள்கையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது வரலாற்று தடத்தில் பாகிஸ்தான் சுருங்கி போகும். இவ்வாறு அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்