வயலில் உயிரிழந்த மூதாட்டி உடலை 1.5 கி.மீ. தூரம் சுமந்து சென்ற காவலர்

தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வயலில் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை 1.5 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சாலைக்கு கொண்டு வந்த காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

ஆறுமுகநேரி அருகே கீழ நவ்வலடிவிளை பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மனைவி அம்மாள் தங்கம் (67). இவர், கடந்த 12-ம் தேதி நாககன்னிகாபுரம் பகுதியில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம் நயினார், மோசஸ் மற்றும் காவலர் காளிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். போக்குவரத்து வசதியின்மையால் மூதாட்டியின் உடலை காவலர் காளிமுத்து சுமார் 1.5 கி.மீ. தூரம் வயல்வெளி பாதையில் தனது தோளில் சுமந்து கொண்டுவந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டினர்.

காவலர் காளிமுத்துவின் மனித நேய செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், அவரை மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.