சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் நாளை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் அதிகமாக கூடி பொழுதைக் கழிப்பார்கள். குறிப்பாக, சென்னையில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடுவார்கள்.
குறிப்பாக, காலை முதல் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக மக்கள் கூடுவார்கள். மாலையில் மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள்.
இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை, நீச்சல் குளம், சர்வீஸ் சாலை என்பது 3 பகுதியாக பிரித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை (ஜன.17) இரவு கூடுதலாக 45 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர். 18-ம் தேதி காலை 90 பணியாளர்கள் கூடுதலாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தினசரி பயன்படுத்தப்படும் 37 குப்பைத் தொட்டிகளுடன் (120 லிட்டர் ) 6 குப்பைத் தொட்டிகள் கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ளது. மேலும், 240 லிட்டர் குப்பைத் தொட்டிகள் 10, 10 ஆர்சி குப்பைத் தொட்டிகள் கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ளது.
எலியட்ஸ் கடற்கரையில் 50 பேட்டரி வாகனங்களும், 20 பணியாளர்கள் கூடுதலாக பணியில் ஈடுபட உள்ளனர். கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் கடற்கரையில் கூடுதலாக 15 பணியாளர்கள் உட்பட டிராக்டர், பேட்டரி வாகனங்கள் உள்ளட்டவை கூடுதலாக பணியில் ஈடுபடுத்தபடவுள்ளது. மேலும், நீலாங்கரை கடற்கரையிலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.