மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, கோலாகலமாக நடந்து முடிந்து. ஜல்லிக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாலை 4 மணி வரை நடந்த இந்த வீர விளையாட்டில் 1,100 காளைகள் களமிறங்கி அதகளப்படுத்தின. மாடுபிடி வீரர்கள் 360 பேர், காளைகளுடன் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் 13 பேர், மாடு உரிமையாளர்கள்- 24 பேர், பார்வையாளர்கள்- 11 பேர், காவலர் 2 பேர் என 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த போட்டியில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். 20 காளைகளை பிடித்த ஏனாதியை சேர்ந்த அஜய் 2-வது இடம் பிடித்துள்ளார். அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் 12 காளைகளைப் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் முதல் 2இடங்களை பிடித்த அபி சித்தர் மற்றும் அஜய் சகோதரர்கள் ஆவர்
இந்த போட்டியில் முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த வீரர் அஜய்-க்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடந்தது. பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக இன்று உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மிகவும் கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார். அவரை பின்பற்றி மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன், தமிழரசி, பூமிநாதன், நடிகர் சூரி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கால்நடைத்துறை சார்பில் இணை இயக்குநர் நட்ராஜ் குமார் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் அடங்கிய 75க்கும் மேற்பட்டோர் 8 குழுக்களாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வந்திருந்த காளைகளின் உடல் தகுதியை பரிசோதனை செய்தனர். காளைகள் பரிசோதனையின் போது விலங்குகள் நல வாரியத் தலைவர் மிட்டல் உடனிருந்து ஆய்வு செய்தார்.
முதலில் அலங்காநல்லூர் காளியம்மன் கோயில், முனியாண்டி கோயில், அரியமலை சாமி கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு திடலில் களமிறங்கின. கோயில் காளைகள் என்பதால், இவற்றை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து சுற்றுக்கு 100 காளைகள் என்ற கணக்கில் காளைகள், ஜல்லிக்கட்டு திடலுக்கு பாய்ந்து வந்தன. மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு, காளைகளின் திமிலை பற்றிக் கொண்டு, விடாமல் மல்லுக்கட்டினர்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் வெற்றி நடை போட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்கக்காசு, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, பீரோ, சைக்கிள் என பரிசுகள் அள்ளி வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு, பரிசாக வழங்கினார்.