Special Maternity Leave: பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுக்குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் அடிப்படையில், பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற சூழலை வழங்குவதாகவும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அவற்றை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்து விரைவில் இறந்தாலோ அல்லது பிரவசத்தின் போது குழந்தை இறந்தாலோ அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிரசவம் ஆனதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பாலியல் துன்புறுத்தல் விசாரணை தொடர்பாக சிறப்பு விடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். பாதிக்கப்பட்ட பெண் 90 நாட்கள் வரை விடுப்பு பெறலாம், விசாரணை நிலுவையில் இருக்கும் போதும் அது வழங்கப்படும் என்றும், இந்த விதியின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு என்பது விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது என்று அமைச்சர் கூறினார்.
மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் சிறப்பு கொடுப்பனவு கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் குழந்தை பராமரிப்புக்காக வழங்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் படி, பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 9 மாத காலம் வழங்கப்பட்ட வந்த நிலையில், தாய்மார்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிறகு ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டது. முன்னதாக தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படமால் இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு தற்போது அனைத்து பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அழிக்கப்பட்டு வருகிறது.