ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி ஆரம்பமாகிறது. இச்சூழலில் நேற்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அரசு சார்ந்த கல்வெட்டுகளும் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்படுகின்றன.
இந்த நிலையில் தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்குகளிலோ ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் படைக்கல சட்டம் 1959-ன் பிரிவு 30-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in