விஜய் டிவி-யில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த 5 சீசன்களை கடந்து, தற்போது 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கல்மஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் விக்ரமன் என்னும் போட்டியாளரை ஆதரித்து அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சில அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க கேட்க, சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கிறது.

யார் இந்த விக்ரமன்?
விக்ரமன் திரைப்பட கலைஞராக, தொகுப்பாளராக இருந்தார். சில தொடர்களில் நடித்திருக்கிறார். பின்பு சில பிரபல ஊடகங்களின் செய்தி பிரிவிலும் தொகுப்பாளராக இருந்தவர். அவர் கடந்த 2020-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். பின் அக்கட்சியில் அறியப்படும் முக்கியமான பேச்சாளராக வலம் வந்தவர். இந்த நிலையில் தான், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. போட்டியின் இறுதியில் மக்கள் அனைவரும் தாங்கள் யார் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவருக்கு வாக்களிக்க வேண்டும். இந்த நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விக்ரமனுக்கு வாக்கு அளியுங்கள் என தன் ட்வீட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்தார். அதில், “தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
What do you say for this … its all a political stunt… how can a respected political leader and sitting MP influence his cadres to vote for a contestant in a reality show… https://t.co/8dnqcw2nIB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 18, 2023
இது பெரும் விவாதமானது. இது தொடர்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான வனிதா விஜயகுமாரும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் பலரும், `இது எப்படி ஆரோக்கியமான போட்டி ஆகும்?’, `விக்ரமன் வெற்றிக்கு தகுதியான நபர் தான். ஆனால் திருமா வாக்கு கேட்டதன் மூலம், அவர் நியாயமாக விளையாடி, சமூக கருத்துகள் பேசி பெறும் வெற்றியில் கட்சி சாயம் பூசப்படும் நிலை ஏற்படுகிறது’, `விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் ஒரு காரணத்திற்காக, அக்கட்சியின் தலைவர் ஓட்டுப்போட சொல்லிறாரா?’, `எப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதை செய்ய முடிந்தது?’ போன்ற பதிவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அளூர் ஷா நவாஸ், “நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் பிக்பாஸ், போட்டியாளருக்கு வாக்கு கேட்க கூடாது என்று வரைமுறை இருக்கிறதா?. விசிக தலைவர் எதைப் பேசினாலும் சர்ச்சை செய்ய வேண்டுமென உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள். ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி ஒரு நிகழ்ச்சி பற்றி கருத்து சொல்லலாம் என கேள்வி எழுப்பினால், அதை நடத்துவது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதைப் பார்க்க தவற வேண்டாம் என்பதே எங்களின் கருத்து.

அதேபோல், அரசியல் கட்சியில் இருந்த ஒருத்தர் அதில் பங்கேற்கும்போதே அது அரசியல் ஆகிவிட்டது. பிறகு அதை அரசியலுக்கு அப்பாற்பட்டு எப்படி பார்க்க முடியும். அவர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன கருத்தியிலை நிலைநிறுத்த அவர் முயற்சி செய்திருப்பதை பாராட்ட வேண்டும். வெறும் பொழுதுபோகிற்காக மட்டுமே பார்த்த மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் ஊடகமாக நிகழ்ச்சியை மடமாற்றம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும் சூழலில் தலைவர் ஒருவர் தன் கருத்தை சொல்லத்தான் செய்வார்.
ஒருவேளை இதில் அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லக் கூடாது என்கிறீர்களா? அப்படி பார்த்தால் ஒரு காலத்தில் திராவிட கருத்துக்கள் தமிழ் சினிமாக்களில் நுழைந்து பல கருத்துக்களை சினிமா வழியாகப் பேசியதைக் கேள்வி கேட்கும் விதமாக இது மாற்றிவிடும். அவர் எந்த கருத்தையும் பேசாமல் ஒரு பங்கேற்பாளராக மட்டுமே இருந்த்திருந்தால், யாரும் அவரை வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர் தன்னை வெளிப்படுத்திய விதம் மற்றும் பேசிய கருத்துக்கள் தான் எங்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைப் பெற்றிருக்கிறது” என்றார்.

”அறம் வெல்லும்” எனகே கூறி விக்ரமனுக்கு திருமாவளவன் ஓட்டு போட சொல்வதெல்லாம் மிகையான செயல் என சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தருவதை எப்படி பார்ப்பது என சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்,
“திருமாவளவன் போன்ற தலைவர் இதை ஏன் கையிலெடுக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. சில சாதிய பின்புலம் கொண்ட கட்சியினர் விக்ரமன் வெல்ல கூடாது என வெளிப்படையாக பதிவுகளைப் போட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக விக்ரமன் பேசுவதைச் சகித்துக் கொள்ள முடியாத சிலர் கண்மூடித்தனமாக அவரை எதிர்க்கிறார்கள். எனவே, அப்படியான அழுத்தம் விக்ரமன் மீது திணிக்கப்படுவதால் அவரை ஆதரிக்க களத்தில் இறங்கினார் திருமாவளவன். இது சரியா? தவறா? என்பதைத் தாண்டி, மக்கள் ஒடுக்கப்படும்போது, அங்கு அவர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்பதே திருமாவளவனின் இந்த செயல் விளக்குகிறது.

சமூக வலைதளத்தில் தவறான கருத்து கூறுகிறார் என்பதற்காக, மருத்துவ சங்கம் ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இல்லை. சமூக வலைதளம் தானே என்று விடுவதில்லை. அதன் சாராம்சம் தவறான ஒரு கருத்தும் பரவக் கூடாது என்பதே. மக்கள் பலர் பார்க்கும் ஒரு தளத்தில் கருத்தியலைப் பேசிய ஒருவன் வெற்றியின் படியில் இருக்கும்போது, அவரைத் தோற்கடிக்க பல சக்திகள் தவறான கருத்தை முன்வைப்பதால், விக்ரமன் ஆதரிக்கப்படுகிறார். மேலும் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் தவறான வார்த்தைப் பேசாமல் இருப்பதை உறுதி செய்தார் விக்ரமன்.

அரசியல் கருத்தை ஒவ்வொரு இடத்திலும் பேசியது, குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது என விக்ரமனின் செயலை அரசியல் தவிர்த்து பார்க்க முடியாது. தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக பேசினார். அதில் ‘மலம் அள்ளும் தொழிலாளர்களின்’ வலியைப் பேசியது மிக முக்கியமானது. சமீபத்தில் ”தமிழ்நாடு நாள்” குறித்து அவர் பேசிய கருத்துக்கள் என தனக்கு கிடைத்த மேடையைச் சரியாக பயன்படுத்தியதைப் பாராட்டியே தன் ஆதரவை திருமாவளவன் வெளிப்படுத்தினார்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்த விவகாரத்தில், உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்க மக்களே….