பெண்களே மகிழ்ச்சி செய்தி … ரூ.200-ல் பாதுகாப்புடன் தங்கும் விடுதி! – அரசின் அசத்தல் திட்டம்…

வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பெண்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு, வெளியூர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அவர்களுக்கு நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு,பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தை துவக்கியுள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு முதல் , மத்திய/மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாத வருமானம் சென்னையில், ரூ.25,000-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

மூன்றாண்டுகள் விடுதியில் தங்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை , தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் நீட்டிக்கப்படும். சென்னையில் மாதமொன்றுக்கு வாடகையாக ரூ.300/ செலுத்த வேண்டும். இதர மாவட்டங்களில் ரூ.200-ம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும், திருச்சியில் 2 விடுதிகளும் உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் உள்ளன.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1415 பேர் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 348 அறைகளில் பெண்கள் தங்கியுள்ளனர். 1067 அறைகள் காலியாக உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.