சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது.
2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில் போட்டியிட்ட, கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தோல்வியடைந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அதிமுக போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.