இந்தியாவில் இலவச டேட்டாவை வழங்கியது முதல் 5ஜி சேவை தொடக்கம் வரை பல முன்னோடி திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் நேற்று ஜியோ நிறுவனம் தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் தங்களது ஜியோ சேவையை தொடங்கியது.

இந்தியாவில் முதன்முறையாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் ஜியோ நிறுவனம் தங்களது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தர்மபுரி நகரங்களும் அடங்கும். இதுவரை இந்தியாவில் 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது 5G சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், கூடுதல் கட்டணம் எதுவுமின்றி அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில் பயன்படுத்த வெல்கம் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த 2023-ம் புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5G சேவைகள் வழங்குவதை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுப்படுத்தப்படும். ஜியோ சேவைகளை விரிவுப்படுத்த உதவிய ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.