திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்ற வாரத்துக்கு சுமார் 2,000 வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வருகின்றனர்.

குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், பின்னலாடை நிறுவனங்களும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது, மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் இயங்கி வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஜனவரி 14-ம் தேதி சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழகத் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இணைந்து, கற்கள், கட்டைகள் கொண்டு தமிழகத் தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்படாத நிலையில், மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.