‘அடித்து சொல்லிக் கொடுங்க’-பிரம்புடன் மகனை பள்ளியில் சேர்த்த பெற்றோர்! சரியான அணுகுமுறையா?

மதுரை செல்லூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், தனது 4 வயது மகனை புதிதாகப் பள்ளியில் சேர்த்தபோது பிரம்பு கம்புடன், உறுதிமொழி பத்திரத்தையும் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்,
இன்றைய காலக்கட்டத்தில் பொதுவாக பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளில் மட்டுமில்லாமல் வீட்டிலும் பாடங்களை தாங்கள் சொல்லிக்கொடுத்து விடுவோம் என்றும், எங்கள் பிள்ளையால் உங்களது பள்ளிக்கு நல்லபெயர் தான் ஏற்படும் என்றும், பிள்ளைகளை அடிக்கவோ, அதட்டவோ, திட்டவோ கூடாது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பேசி முடித்துவிட்டு தான் அட்மிஷன் போட்டுவருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். மேலும் அரசு சார்பிலும் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாகவே பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
image
இந்நிலையில் தற்போது மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது 4 வயது மகனைப் பள்ளியில் சேர்க்கும்போது, சரியாக படிக்கவில்லை என்றால் அடிக்கலாம் எனவும், அப்போது தான் அவன் வாழ்க்கையில் சரியானப் பாதையில் முன்னேற முடியும் எனவும் கூறி, அதற்காக 4 அடி நீளமுள்ள பிரம்பு குச்சியையும் கொடுத்து, அடித்தால் கேட்க மாட்டோம் என்று உடன்படுகிறோம் என உறுதிமொழியையும் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் மகன் தவறு செய்தால் அடிக்கலாம்-உறுதிமொழி கடிதம் அளித்த பெற்றோர்
image
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் – தமிழரசி என்ற தம்பதியினர், அவர்களது 4 வயது மகனான சக்தி என்ற சிறுவனை இன்று செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்த்தனர். அப்போது 4 அடி நீளமுள்ள பிரம்பு கம்பு ஒன்றையும், அடித்து சொல்லி கொடுங்கள் என்ற பெற்றோர் உறுதிமொழி கடிதத்தையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற உறுதிமொழி பத்திரத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர்
அடித்து சொல்லி தரவேண்டுமென எழுதி கொடுத்ததற்கு காரணம் இது தான்!
image
அடிப்பதற்கு பிரம்பு கம்பையும், அதற்கு ஆட்சேபனை இல்லை என்ற உறுதிமொழி கடிதத்தையும் அளித்த பெற்றோர் கூறுகையில், “ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் தான், இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்து உள்ளோம்” என்று அந்த பெற்றோர் தெரிவித்தனர்.
மாணவர்களை அடித்து சொல்லிகொடுக்கும் முறை எந்தளவு சரியானது?
தற்போது உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் திட்டிவிட்டால் கூட விபரீத முடிவுக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் தான் அரசாங்கம் கூட மாணவர்களின் மனநிலை உறுதித்தன்மையை ஆதாரமாக கொண்டு அடிக்கும் சூழலை தடுக்கும் விதமான அறிவிப்புகளை அறிவித்துள்ளது. ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை என்றாலோ அல்லது தவறு செய்துவிட்டாலோ அதை அடித்து திருத்தும் நடைமுறையானது ஏற்புடையது தானா என்ற கேள்வி ஒவ்வொரு மாணவர் தாக்கப்படும் போதும், விபரீத முடிவு எடுக்கும்போதும் எழுந்துகொண்டே தான் இருக்கின்றன.
தற்போது ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றமானது பெரிதாக பிள்ளைகளின் படிப்பை சார்ந்தது மட்டுமில்லாமல், தனிப்பட்ட திறமையை முன்னிலைப்படுத்தி முன்னேறும் மார்க்கமாக மாறிவருவது ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. படிக்கும் பிள்ளை தான் முன்னேறும், படிக்காத பிள்ளை முன்னேறாது என்ற முந்தைய முன்னோட்ட மனநிலை எல்லாம் தற்போது மாறிவருவது ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
image
தவறை திருத்திக்கொள்ள கண்டிப்பதும், தண்டிப்பதும் ஒருபோதும் தவறானதாக பார்க்கப்பட கூடாத ஒன்று தான், ஆனால் பிரம்பை கொண்டு அடிப்பது என்பது சரியாக அணுகுமுறை தானா என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய இடத்திலும் நிச்சயம் இருக்கிறோம்.
எதிர்கால தலைமுறையினருக்கு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் கடமை, ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோருக்கும் மட்டுமில்லாமல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதனை ஒருசார்பாக பார்க்காமல், காலத்தின் மாற்றத்திற்கும், மாணவர்களின் மன உறுதித்தன்மையை சார்ந்திருக்கும் மாற்றமாக நிச்சயம் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.