காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட மத்திய அரசின் கீழ் இயங்கும் விலங்கள் நல வாரியம் வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் காதல் மாதம், காதலர் வாரம் என பல வகைகளிலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன .
உலகெங்கும் உள்ள ஜோடிகள் அன்பை பொழிய, காதலை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர். முன்பெல்லாம் காதலர் தினத்திற்கு வாழ்த்து அட்டை வழங்கி காதலை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அந்த கலாசாரமே குறைந்துவிட்டது.
டிஜிட்டல் வாழ்த்துகள் தான் தற்போது பிரபலம். இன்ஸ்டா காதலில் இந்த காலத்து இளைஞர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட மத்திய அரசின் கீழ் இயங்கும் விலங்கள் நல வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பசுமாடுகள் நமது கலாசாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு. பசு நம்மை வாழவைக்கும். மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாசாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது.
பசுக்கள் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள்.
பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம். இது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் முறையான ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in