இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலூன் :அமெரிக்க நாளிதழில் பரபரப்பு கட்டுரை| A Chinese balloon that spied on India: sensational article in an American newspaper

வாஷிங்டன்: உளவு பலுான்களை பறக்கவிட்டு, அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சீன அரசு உளவு பார்த்த விபரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது.

பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அது குறித்த தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொண்டனர். இந்த பலுான், நிலப்பரப்பில் இருந்து கடல் பகுதிக்குள் நுழைந்தபோது, அமெரிக்க போர் விமானம் வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா அருகே, அட்லான்டிக் கடலில் விழுந்த அந்த பலுானின் உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், அந்த உளவு பலுான் குறித்து பல்வேறு ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை பேட்டி எடுத்து, அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

சீன உளவு பலுான் குறித்து, வாஷிங்டனில் உள்ள 40 நாடுகளின் துாதர்களை அழைத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்தியா, ஜப்பான், வியட்னாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ராணுவ சொத்துக்கள் குறித்த விபரங்களை, சீன உளவு பலுான்கள் பல ஆண்டுகளாகவே சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உளவு பலுான்கள் ஐந்து கண்டங்களில் தென்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போன்ற கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளை செய்ய ஏராளமான உளவு பலுான்களை சீன அரசு தங்கள் வசம் வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ஹவாய், ப்ளோரிடா, டெக்சாஸ், குவாம் மாகாணங்களில் இது போன்ற பலுான்கள் தென்பட்டுள்ளன. இந்த நான்கில் மூன்று பலுான்கள், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி வகித்த காலத்தில் கண்டறியப்பட்டன. கடந்த வாரம் கண்டறியப்பட்ட போது தான், அது சீன உளவு பலுான் என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.