ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை ஈரோடு மணல் மேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், செம்மலை மற்றும் பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல் மேடு, கிராமடை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு மணல் மேடு பகுதியில் ஒரு வீதியில், பெண்கள் ஆரத்தி எடுக்க காத்திருந்தனர். வழக்கமாக ஆரத்தி எடுத்தால் அந்த தட்டில் பணம் வைப்பது வழக்கம். இதற்காக கட்சியினர் சிலரே பெண்களை ஆரத்தி எடுக்க வைப்பர். அதுபோல, இன்று அதிமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தபோது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க, சீருடையணிந்து பள்ளிக்கு செல்லத் தயாராக இருந்த சிறுவர், சிறுமிகளை நிற்க வைத்திருந்தனர். பள்ளி செல்லும் சிறுமிகளை அதிமுக.,வினர் ஆரத்தி எடுக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.