துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபாசியாபத் அருகே காலை 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
துருக்கி – சிரியா, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.