
3 வயது குழந்தையை கடத்தி கேஸ் சிலிண்டரை திறந்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா – அமுதா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜா, மனைவியை பலமாக தாக்கியதாக தெரிகிறது.
காயம் அடைந்த அமுதா அவரது அண்ணன் காளியப்பனுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து காளியப்பன், அமுதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் காளியப்பன் வீட்டிற்கு சென்ற ராஜா, காளியப்பனின் 3 வயது மகனை கடத்தினார்.
தனது வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்து கதவுகளை பூட்டிக்கொண்டார். தனது மனைவியை அழைத்து வந்தால் மட்டுமே குழந்தையை விடுவேன் என்றும் வீட்டிற்குள் இருந்து ராஜா மிரட்டியதாக தெரிகிறது.

தகவல் அறிந்து வந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் ஆகாத ராஜா வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து கேஸை வீடு முழுவதும் கசிய விட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
விபரீதத்தை உணர்ந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். குந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர் கசிவை நிறுத்தினர். சிலிண்டர் திறந்தவெளி இடத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in