நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நாகாலந்தில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நாகாலந்தில் உள்ள அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கெகாஷே சுமி, தனது மனுவை வாபஸ் பெற்றார்.
இதன் மூலம் அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கசெட்டோ கிமினி, தனது பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.