என்.ஐ.ஏ 60 இடங்களில் சோதனை… கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பில் யார் யார்?

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இது வெறும் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. தீபாவளி பண்டிகையை ஒட்டி திட்டமிடப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் எனத் தெரியவந்தது.

ஜமேஷா முபீன் உயிரிழப்பு

கார் வெடி விபத்தில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இவரது பின்னணி மற்றும் கூட்டாளிகள் உள்ளிட்டோருடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு சிசிடிவி காட்சிகள், ஜமேஷா முபீனின் வீடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபீனின் கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்.ஐ.ஏ விசாரணை

அடுத்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை கையில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடம் இருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கோவை கார் வெடி விபத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் தீவிர விசாரணை

அதில் பயிற்சி பெற்றவர் தான் ஜமேஷா முபின் என்று போலீசார் குறிப்பிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜமேஷா முபீனின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தினர்.

தென்னிந்தியாவில் பரபரப்பு

அதன் அடிப்படையில் இன்று (பிப்ரவரி 15) காலை சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையை பொறுத்தவரை உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, எம்.நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கப் போவது யார்?

இதுதவிர கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சில இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் விரிவான தகவல்கள் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை கார் வெடி விபத்து மேலும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது?

புதிதாக என்னென்ன ஆவணங்கள் சிக்கப் போகின்றன? வழக்கின் திசை எங்கே செல்லப் போகிறது? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சைலண்ட் மோடில் இருந்த நிலையில் மீண்டும் சோதனையில் இறங்கியிருப்பது தென்னிந்தியாவை பரபரப்பிற்கு ஆளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.