தூத்துக்குடி: அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்பசு; மீட்ட வன அலுவலர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மத்தியரசு, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக அறிவித்துள்ளது. இங்கு 4,223 வகை கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பாம்பனுக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான  560 சதுர கி.மீ. கடல்பகுதி  பரப்பளவில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன.

கடல் பசுவின் முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள்

இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய உயிர்ப்பூங்காவாக தமிழக அரசு 1986-ல்  அறிவித்தது. இதில், 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதுடன், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் தாக்காதபடி தடுப்பு அரண்களாகவும் செயல்படுகின்றன.

இதனால்தான், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது இந்த இரண்டு மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் பெரிய அளவிலான பாதிப்புகள்  ஏற்படவில்லை. இந்த தீவுகளை சுற்றிய பகுதிகளில் மீன்வளம் அதிகம் இருக்கும் என்பதால் இவை மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன. இதில், தூத்துக்குடி அருகே உள்ள 4 தீவுகளில் கடல்பகுதியில் கடல் பசுக்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை பவளப்பாறைகளுக்கு இடையில் வளரும் கடல் புற்களை  மட்டுமே  உணவாகக் உண்டு உயிர் வாழக் கூடியது.

உயிரிழந்த கடல் பசு

இந்த அரிய வகை கடல் பசுவைப் பாதுகாக்கும்  வகையில் இந்த தீவுப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் கடல் பசு ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளது,  முத்துநகர் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இறந்து கிடந்த கடல் பசுவைப் பார்த்து  மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவின் வனச்சரக அலுவலர் ஜினோ பிளசில் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் கடல்பசுவை மீட்டனர். கால்நடை மருத்துவர் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஐந்து வயதுடைய இந்தக்கடல் பசு, 7 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

புதைக்கப்பட்ட கடல் பசு

இரைதேடும் போது கப்பல் அல்லது விசைப்படகுகளில் மோதியதில் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இறந்திருக்கலாம் என்றனர் கால்நடை மருத்துவர்கள். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், கடல்பசு கடற்கரைப் பகுதியிலேயே புதைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் கடல்பசுவைப் பார்த்துச் சென்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.