ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், இந்த மாதம் 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தங்களின் வேட்பாளர் வெற்றி பெற அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, நாம் தமிழர் உள்ளிட்டக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியின் பெயரில், ‘கண்ணன் குலத்தைச் சேர்ந்த நமது பங்காளிக்கு வாக்குச் செலுத்துங்கள்’ என்ற கடிதம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஈரோடு முனிசிபல் காலனி பி.லோகநாதன் என்பவருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணன் குலத்தை சேர்ந்த நமது பங்காளிகள், கழக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கவும், தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அவர்களிடத்தில் வாக்களிக்க தாங்கள் உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்ற தேர்தலாக இருப்பதால், தாங்கள் கழக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வேண்டும்.

கண்ணன் குலத்தில் நானும் ஒருவன் என்ற முறையிலும், கண்ணன் குலத்தைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய ஓர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதால் இந்த வெற்றி நம் கண்ணன் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தேர்தல் களத்தில் அனலைக் கூட்டியிருக்கும் நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “தி.மு.க-வினர் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதரீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அவர்கள்மீது புகாரளித்திருந்தோம். அதனால், காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற வேலைகளில் தி.மு.க-வினர் இறங்கியிருக்கின்றனர். அது மாதிரி எந்தக் கடிதமும் எங்கள் தரப்பிலிருந்து எழுதப்படவில்லை. நாங்கள் அவர்கள்மீது புகார் கொடுத்திருப்பதால், அவர்கள் நாங்கள் சமூகம்சார்ந்து வாக்குச் சேகரிப்பது போல சித்திரித்து, கீழ்த்தரமான அரசியல் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க சாதி, மதங்களைக் கடந்த பேரியக்கம். அது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இதெல்லாம் பெரிதாக களத்தில் எதிரொலிக்காது” என்றார்.