குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, தமிழகத்துக்கு முதன் முறையாக வருகை தரும் திரவுபதி முர்மு, மீனாட்சியம்மனை வழிபட இன்று காலை மதுரை வந்தார்.

இன்று காலை 11:40-க்கு மதுரை வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து கோயிலுக்குக் கிளம்பியவர், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது அறங்காவலர் கருமுத்து கண்ணன், அறநிலையத்துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடந்தன.

அங்கிருந்து சர்க்யூட் ஹவுஸுக்கு கிளம்பியவர், தெற்கு ஆவணி மூல வீதியில் நின்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்து, திடீரென காரிலிருந்து இறங்கி அவர்களைப் பார்த்து வணங்கி கைகாட்டினார்.
பின்பு சர்க்யூட் ஹவுஸில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், மாலை 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றார்.
குடியரசுத் தலைவரின் வருகைக்காக மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளூர் அமைச்சர்களான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ளாததும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குடியரசுத் தலைவரை வரவேற்றதும் மாவட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

“குடியரசுத் தலைவரை வரவேற்று வழியனுப்பி வைக்கும் நிகழ்வுக்கு, அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி வைத்ததன் மூலம் கட்சித் தலைமை, தமிழக பா.ஜ.க-வை வெறுப்பேற்றியிருக்கிறது” என்கிறார்கள் தி.மு.க-வினர்.
இது தொடர்பாக உள்ளூர் தி.மு.க-வினரிடம் விசாரித்தோம். “கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அமைச்சர் என்ற முறையில் மண்டைக்காடு திருவிழாவில் தேர் வடம்பிடிக்க வந்த மனோ தங்கராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு நடக்கவிருந்த சமய மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்ததாகவும் மனோ தங்கராஜ்மீது புகார் செய்தனர். இப்படியான சூழலில், குடியரசுத் தலைவரை வரவேற்கவும், அவருடனயே மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லும் வகையிலும் மனோ தங்கராஜ் இருக்கும் வகையில் அவரை கடைசி நேரத்தில் அனுப்பியிருக்கிறது தலைமை.

இதன் மூலம் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக பா.ஜ.க-வினருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள். மனோ தங்கராஜ்