புதுடில்லி,நம் நாட்டில் பனிக்காலம் முடிந்து, வசந்த காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே மேற்கு மாநிலங்களில் கோடைக்காலம் அளவுக்கு வெப்பநிலை திடீரென உயர்ந்துள்ளது. இது அசாதாரணமானது என்று வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்தாண்டை விட மோசமாக இருக்காது என்றும் அவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் வழக்கமாக பனிக் காலம் முடிந்து, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை வசந்த காலம் என குறிப்பிடுவர். கடந்தாண்டில், பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்தது.
காட்டுத் தீ
இதனால், நாட்டின் மேற்கு கடலோரத்தில் உள்ள பகுதிகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடும் தாக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் பனிமலைச் சிகரம் வேகமாக உருகியது.
நம் நாட்டில் உத்தரகண்டில் காட்டுத் தீ பாதிப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் அசாதாரண பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சம்பவங்களில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில், ௯௦ பேர் உயிரிழந்தனர். மேலும், நம் நாட்டின் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தற்போது இங்கு வசந்த காலம் துவங்க உள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் திடீரென வெப்பநிலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா போன்ற மேற்கு கடலோர மாநிலங்களில், இயல்பை விட, ௫ – ௧௦ டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இது குறித்து, வானிலை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களில் திடீரென ௫ – ௧௦ டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
வானிலை ஆய்வுகளின்படி, இந்த காலகட்டம் அசாதாரணமானதாகும்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தான் அதிகபட்ச வெப்பநிலை கடுமையாக உயர்ந்தது. ஆனால், தற்போது பிப்., மாதத்திலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
குஜராத்தின் புஜ்ஜில் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட ௧௦ டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும்.
ராஜஸ்தானின் பிகானீரில், 36.௮ டிகிரி செல்ஷியஸ் பதிவானது. ஜம்மு – காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 7 – 9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவானது.
வழக்கமாக மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து, நவ., – டிச., மாதங்களில் காற்று வீசும். இது, நம் நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் மழையையும், இமயமலை பிராந்தியத்தில் பனியையும் ஏற்படுத்தும். இதனால், இந்தப் பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆனால், இந்த மேற்கத்திய காற்று வீசுவதில் சில தடங்கல் ஏற்பட்டது. இதனால், கடலில் இருந்து நிலப்பகுதியை குளிர வைக்கும் காற்று வீசுவது தடைபட்டுள்ளதால், தற்போது வறண்ட வானிலையும், அதிகபட்ச வெப்பநிலையும் நிலவுகிறது.
தற்போதுள்ள இந்த நிலை, அடுத்த சில நாட்களில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ௨௦௨௨ல் வசந்த காலம் ஏற்படாமல் கோடைக்காலம் உருவானது போன்ற மோசமான நிலை, இந்தாண்டு இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்