ஈரோடு கிழக்கு | வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘பேலட் பேப்பர்’ பொருத்தும் பணி மும்முரம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று நடந்தது. இப்பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி மற்றும் பொது பார்வையாளர் ராஜ்குமர் யாதவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானதால், கூடுதலான ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டது. எனவே, கூடுதலாக 1100 வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும், 5 வாக்குப்பதிவு இயந்திரம், 1 கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் பொருத்தப்பட உள்ளது.

கூடுதல் இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மேலும், ஈரோடு மாநகராட்சி அலுவலக வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரது புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இப்பணி நடந்து வருகிறது.

மேலும், தேர்தல் தொடர்பான வரும் புகார்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண்பார்வையார்கள், வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.