இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் எனும் புதினத்தை கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படமாக கொடுத்தார். பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார், இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் பொன்னியின் செல்வன்-1 படமும் ஒன்றாக திகழ்ந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, அஷ்வின், ரஹ்மான், ஜெயராம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தற்போது படக்குழுவினர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகின்றனர். படத்தின் முதல் பாகம் உருவாக்கப்பட்டபோதே, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, பொன்னியின் செல்வன்-2 படம் ஏப்ரல்-28 அன்று திரையரங்குகளில் வெளியாகாது என்றும் படத்தின் வெளியீட்டு தேதி கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியானது.
‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் வெளியீட்டு தேதி என்று வெளியான செய்திக்கு பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ள செய்தியின்படி, பொன்னியின் செல்வன்-2 படத்தின் வெளியீட்டு தேதியில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், ஏற்கனவே அறிவித்தபடியே ஏப்ரல்-28ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன்-2 பிரம்மாண்டமாக வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன்-2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதியன்று சென்னையில் நடைபெறும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.