வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை உடனே கைது செய்க: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களால் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்துவதற்கான செயல்முறையைத் தவிர வேறில்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்டை பிறப்பித்த நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டால் செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை ரத்து செய்யும் வரை நடைமுறையில் இருக்கும். குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும்போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகள் குறித்து தங்களது கவலையை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகளை முறையாக நிறைவேற்றுவதில் காவல் துறையின் முறையாக செயல்படவில்லை என்றும், மெத்தனப் போக்காக உள்ளதாக வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளதோடு, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள், மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள் , மாஜிஸ்திரேட்டுகள் என அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பாக, கடந்த 06.01.2023 தேதியிட்ட உத்தரவின்படி, மேற்கு மண்டலம் ஐஜி , சம்பந்தப்பட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் இருந்து அனைத்து விவரங்களையும் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஒப்பிட்டு பார்த்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் வழக்குகள் மட்டுமல்லாமல், மற்ற எல்லா வழக்குகளிலும் கீழமை நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்கள்களில் நிலுவையில் உள்ள வாரண்டுகள், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டுகள் குறித்த விரிவான அறிக்கை வழங்க வேண்டும்.

அனைத்து காவல் துறை ஆணையர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உடனடியாக நிலுவையிலுள்ள அனைத்து வாரன்ட்டுகளை நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும்” என்று அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.