விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த கோயிலில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மயானக்கொள்ளை, தீமிதி திருவிழா, தேர் திருவிழாக்களின் போது பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து குவிவார்கள். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி துவங்கிய இந்த மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சாமி தரிசனம் செய்யவதற்காககவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது, வேலூர் பகுதியை சேர்ந்த 60 வயதான விநாயகம் என்பவர் திடீரென கோயில் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
மேலும், மேல்மலையனூர் அருகே உள்ள கோடியக்கொள்ளை பகுதியை பாலசுப்பிரமணியம் (வயது-55) எனும் நபர், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வளத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வந்த இரண்டு நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு வசதிகள் சரியாக ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், உயிரிழந்தவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பால் உயிரிழந்தாகவும், கூட்ட நெரிசல் காரணமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.