அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக-வும், காங்கிரஸும் இதில் கவனம் செலுத்திவரும் அதேவேளையில், 2024-ல் வலுவான கூட்டணி அமைக்கக் காய்களை நகர்த்திவருகிறது காங்கிரஸ்.

அதன் ஒருபகுதியாக சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில், நேற்று முதல் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது. இன்றைய கூட்டத்தில், கூட்டணி அமைக்க வலியுறுத்தி பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும், பா.ஜ.க-வை தோற்கடிக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “மதச்சார்பற்ற மற்றும் சோஷலிச சக்திகளின் ஒற்றுமையே காங்கிரஸின் எதிர்கால அடையாளமாக இருக்கும். ஒத்த எண்ணம் கொண்ட மதச்சார்பற்ற சக்திகளை அடையாளம் கண்டு, அவற்றை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளைக் காங்கிரஸ் மேற்கொள்ளவேண்டும்.

அதோடு, நம் சித்தார்த்துடன் ஒத்துப்போகும் மதச்சார்பற்ற பிராந்திய கட்சிகளையும் சேர்க்கவேண்டும். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை பொதுவான கருத்தியல் எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் தேவை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மூன்றாவது அணி உருவாவது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும்” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.