ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடை மேடு ஆலமரத்துத் தெருவில், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர் பொன்முடி நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, “முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இங்குதான் பிரச்சாரம் செய்கிறார்” என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய பொன்முடி, செல்லூர் ராஜு வாக்கு சேகரித்த வீட்டுக்குள் சென்றார்.
அவரை வரவேற்ற செல்லூர் ராஜு, நலம் விசாரித்தார். சிறிது நேரம் இருவரும் சிரித்துப் பேசி, ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஒரே நேரத்தில் கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா காலத்தில் இதுபோன்ற சந்திப்பு நடந்திருந்தால், செல்லூர் ராஜு மீது நடவடிக்கை பாய்ந்திருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செல்லூர் ராஜு கூறியதாவது: ஜெயலலிதா இருந்திருந்தாலும், இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார். எதிர்க்கட்சியினர் வீட்டு விசேஷத்துக்குக்கூட போகலாம் என்றுதான் அவர் கூறுவார்.
நான் மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக துணை மேயர் மிசா பாண்டியன் இல்லத் திருமணத்தில் பங்கேற்றேன். அப்போது, நானும், மு.க.அழகிரியும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படத்தை, எனது அரசியல் எதிரிகள் ஜெயலலிதாவுக்கு அனுப்பிவிட்டனர். இதையடுத்து, எனது பதவியை அவர் பறித்து விட்டார். பின்னர் நான் அவரை சந்தித்து விளக்கம் அளித்தேன்.

மேலும், அந்தப் புகைப்படம் பொய்யானது என்று கூறினேன். அங்கிருந்த புகைப்படக் கலைஞரிடம் அதைக் கொடுத்து, சரிபார்க்கச் சொன்னார். அதில், அந்தப் படம் போலியானது என்று தெரியவந்தது.
அப்போது, “திமுக பிரமுகர் வீட்டுத் திருமணத்துக்கு நீங்கள் போனதில் தவறில்லை. ஆனால், நிகழ்ச்சிக்கு முதல் நாளோ அல்லது அடுத்த நாளோ போயிருக்க வேண்டும்.
அனைவர் முன்னிலையிலும் பங்கேற்றால், இருவரும் ஒன்றாக இருப்பதாகக் கருதி, தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, விமர்சனத்துக்கு உள்ளாகாதீர்கள்” என்று கூறியதுடன், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினார். இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.