சென்னை: பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் குரூப்-2 முதன்மைத்தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாகத் தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்துக்கும், தாமதத்துக்கும் காரணம். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்பபெறப்பட்டுள்ளது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்து, வேறு ஒருநாளில், இத்தேர்வை டிஎன்பிஎஸ்சி மீண்டும் நடத்தவேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. இதற்கு டிஎன்பிஎஸ்சி மற்றும்தமிழக அரசின் அலட்சியமே காரணம். பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதியில்புதிய தேர்வு நடத்த வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழக இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.