புதுடெல்லி: தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் செல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அவர்கள் செங்கோட்டை பகுதியில் இருந்து பிப்ரவரி 14ம் தேதி செல்ல உள்ளனர் என்றும் டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது, அதில் 2 துப்பாக்கிகளும்., 10 தோட்டாக்களும் இருந்தன. 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது:
ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காலித் முராபக் கான், தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளோம். பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவன், சமூக வலைத்தளம் மூலமாக 2 பேருக்கும் அறிமுகமாகி உள்ளான். அவன் கொடுத்த வழிகாட்டலின்படிதான் இந்த 2 பேரும் ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.